ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 141ஆவது இடம் கிடைத்துள்ளது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Borders (RSF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை இந்த வருடமும் 141ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டள்ளது. எனினும் புள்ளிகள் அடிப்படையில் (-0.62) ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த வருடம் வெளியான அறிக்கையிலும் இலங்கைக்கு 141வது இடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இலங்கையில் இடம்பெற்ற பெரும்பாலான ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் தீர்க்கப்படாத ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் ஒருபோதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படக் கூடாது என அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளில் 62 சதவீதமான நாடுகளில் இந்த வருடத்தில் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் உயர் மட்டத்தில் பேணப்படும் நாடுகளில் முதலிடத்தில் நோர்வே உள்ளது. இதற்கு அடுத்து வரும் இடங்களில் சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்கு கடும் முட்டுக்கட்டைகளை விதித்துள்ள வட கொரியாவானது இந்தப் பட்டியலில் இறுதி இடமான 180 ஆவது இடத்திலுள்ளது.
அந்நாட்டிற்கு அடுத்ததாக ஊடக சுதந்திரம் மிக மோசமான நிலையிலுள்ள நாடுகளாக எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா, சீனா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேசமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாவோஸ், பாகிஸ்தான், சுவீடன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஊடக சுதந்திரம் முன்னேற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை,
சவூதி அரேபியா, எதியோப்பியா, மாலைதீவு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடக சுதந்திரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறது.
மேலும், இந்தப் பட்டியலில் அமெரிக்கா 43 ஆவது இடத்திலுள்ளது.கடந்த வருடம் அமெரிக்கா 41 ஆவது இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக அவற்றை அடிக்கடி தாக்கிப் பேசுவதை வழமையாகக் கொண்டுள்ளமை குறித்து மேற்படி அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.