எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தீர்வுத் திட்டம் தயாரானதும் அதனை நாம் மக்களுக்குச் சமர்ப்பித்து ஆலோசனைகளைப் பெறுவோம், அதனடிப்படையில்தான் இறுதி முடிவெடுப்போம். இது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவும் முடியாது.
பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டிலுள்ள ஆட்சிமுறை எமக்கு உகந்ததாக அமைவதற்கு ஏற்பட்ட வாய்ப்புக்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இதனை இம்முறையும் நாங்கள் இழக்க முடியாது. தற்போது எமது மக்கள் நாள்தோறும் காணி விடயங்கள், மீள்குடியேற்றங்கள் தொடர்பில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றார்கள். இவற்றினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
எமது மக்கள் தங்களது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை தாங்கள் கைப்பற்றி, அதன் மூலம் தங்களுடைய அபிலாசைகளையும், உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய நிலைமையினை சர்வதேசத்தின் ஆதரவுடன் பெற்றுக் கொள்ள வேண்டும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.