தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
சிகாகோ நகரில் மாபெரும் பேரணியை தொழிலாளர்கள் வீறுகொண்டு நடத்தி, தங்கள் இன்னுயிரை பலி கொடுத்து பெற்ற உரிமைகளை நினைவுகூறும் வகையில்தான் நாமெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தினருடன் இணைந்து மே 1-ந்தேதியை இன்றைக்கு ‘மே தினமாக’ கொண்டாடுகிறோம்.
தொழிலாளர்களின் தோழனாக எப்போதும் இருப்பவர் தலைவர் கருணாநிதி. அந்த தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது தி.மு.க. ஆட்சி என்பதை பெருமையுடன் இந்த நேரத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன். தொழிலாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான உறவு இன்று ஏதோ எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதால் அல்ல. தி.மு.க. ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கோரிக்கைக்காக குரல் எழுப்பும் முன்பே அந்த கோரிக்கைகள் பற்றி கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்து ‘தொழில் அமைதியை’ பாதுகாத்து வந்தவர் தலைவர் கருணாநிதி என்பதால்தான் இந்த உறவு நீடித்த உறவாக நிலைத்த உறவாக இன்றும் தொடருகிறது.
ஆளுங்கட்சியில் இருந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக கைகோர்த்து போராடுவதிலும் தி.மு.க. என்றைக்கும் முன்னணியில் நின்று இருக்கிறது.
புதிய தொழிலாளர் சட்டம், உலகமயமாக்கல் என்று எந்த காலகட்டத்திலும் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் எழும்போது இனிமேலும் முதல் படைத்தளபதியாக நின்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தி.மு.க. போராடும் என்பதை இந்த மே தினத்தன்று தெரிவித்து, தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க, அவர்களின் இல்லங்களில் எல்லாம் இன்பம் பூத்துக்குலுங்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு எனது சார்பிலும், தலைவர் கருணாநிதி சார்பிலும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.