‘அமெரிக்க அதிபர் பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்’ என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி 20-ம் திகதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் பணி மிகவும் எளிமையாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் அந்தப் பணி எவ்வளவு சவாலானது என்பதை இப்போது உணர்கிறேன்.
கார் ஓட்டுவதை மிகவும் விரும்புவேன். நான் நினைத்தால்கூட இப்போது கார் ஓட்ட முடியாது. எனக்கு பிடித்தவற்றை, தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இழந்துவிட்டேன்.
24 மணி நேர பாதுகாப்பு காரணமாக பட்டுப்புழு கூட்டில் இருப்பதுபோல உணர்கிறேன். இந்த நேரத்தில் எனது பழைய வாழ்க்கையையே விரும்புகிறேன் என்றார்.