கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து கொள்ளை போன பொருட்கள் என்ன என்பது சிறையில் உள்ள சசிகலாவிற்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் என்னென்ன என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மறைந்த டிரைவர் கனகராஜ் ஆகிய 3 பேருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
இதில் இருவர் மரணமடைந்து விட்டதால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு மட்டுமே கொள்ளை போன பொருட்களைப் பற்றி தெரியும் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடநாடு எஸ்டேட்டில் ரூ.200 கோடி பணம் மற்றும் தங்கக்கட்டிகள் இருப்பதாக கருதிய டிரைவர் கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தின் அடிப்படையில், கூலிப்படையினர் எஸ்டேட்டுக்குள் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
கொடநாட்டில் உள்ள எஸ்டேட், பங்களா, 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த கொடநாடு பங்களாவில் யாரும் அவ்வளவு சுலபத்தில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பங்களாவைச் சுற்றிலும் உயர் மின்னழுத்த மின்வேலி மற்றும் தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு உள்ளனர்.
அனைத்து இடங்களிலும் நூற்றக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி கட்டுப்பாட்டு அறையே கொடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருடத்தில் 4 மாதங்கள் கொடநாடு பங்களாவில் தான் தங்கி அரசு பணிகளை கவனித்து வந்தார்.
இதனால் இந்த பங்களாவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள் மற்றும் வைர தங்க நகைகளும் அதிகளவில் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா தவிர பங்களாவில் வேலை செய்யும் நபர்கள், கார் டிரைவர்களுக்கு மட்டுமே கொடநாடு பங்களாவில் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றபடி யாரும் அந்த பங்களாவில் நுழைய முடியாது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா தோழி சசிகலா கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி கொடநாடு பங்களாவில் அனைத்து பாதுகாப்பையும் மீறி காவலாளியை கொன்று விட்டு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதி பயங்கர பாதுகாப்பையும் மீறி 11 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்திய போது ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் உருவத்துடன் ஒத்துப் போனது.
சிசிடிவி கேமராவில் பதிவான உருவம் கனகராஜ் போன்று இருந்ததால் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கனகராஜ் சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சமுத்திரம் சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர். கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனில் கனகராஜ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஜெயலலிதா எப்போது கொடநாடு செல்கிறாரோ அப்போது கொடநாட்டிலும் கனகராஜ் தான் கார் ஓட்டி வந்தார்.
கொடநாடு பங்களா பராமரிப்பு பணியையும் அவர் தான் செய்து வந்துள்ளார். கனகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்த வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே ஜெயலலிதா அறையில் பீரோவில் இருந்த சில வாட்சுகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு கிரிஸ்டல் சிலையையும் எடுத்து சென்றுள்ளனர் என்று போலீசார் கூறி வருகின்றனர்.
பங்களாவில் இருந்த பொருட்கள் குறித்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும், டிரைவர் கனகராஜ்க்கும் தெரியும்.
கடந்த 28ம் தேதி இரவு சென்னை-ஆத்தூர் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற போது கார் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவும் மரணமடைந்து விட்டதால் கொடநாடு பங்களாவில் இருந்த பொருட்கள் பற்றி தெரிந்த ஒரே நபரான சசிகலாதான்.
தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். இதனால் எவ்வளவு நகை, பணம், பொருட்கள்,ஆவணங்கள் கொள்ளை போனது குறித்து கணக்கெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பங்களாவில் என்னென்ன இருந்தன என்று சசிகலா வாயை திறந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் கொடநாடு பங்களா டிடிவி.தினகரன் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் வெறும் பணத்திற்காக மட்டும் நடந்ததாக தெரியவில்லை.
ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை நன்கு தெரிந்த நபர்கள் மூலம் தான் இந்த கொள்ளை சம்பவத்தை முன்னின்று நடத்தியதாக பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே மர்மம் விலகும் என்று அரசியல் கட்சியினர் மட்டுமல்ல பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சி நடைபெறுவதால் இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.