கொடநாடு காவலாளி கொலை.. சசியை விசாரியுங்கள்.. போலீசுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை!
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் என்ன என்பது பற்றி சசிகலாவிற்கு மட்டுமே தெரியும். எனவே அவரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் போலீசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் இருந்த பணம், நகை மற்றும் கட்சியின் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
இன்னொரு குற்றவாளியான சயன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை, மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கேரளா மாநிலத்தை சேர்ந்த சாமியார் மனோஜையும் போலீசார் கைது செய்தனர்.
அவரை கொலை நடந்த பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பணம், விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்ததாவது: கொடநாடு பங்களாவில் என்ன பொருட்கள் இருந்தன என்பன அனைத்தும் சசிகலாவிற்கு மட்டுமே தெரியும்.
எனவே அவரிடம் போலீஸ் விசாரித்தால் ஒளிந்து கொண்டிருக்கும் அனைத்து உண்மைகளும் வெளியில் தெரிய வரும். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.