வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ அமில வீச்சில் கொல்ல சதி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் தென் கொரியா இனைந்து குறித்த சதி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கிம் ஜாங் மீது உயிர்வேதியியல் பொருட்களை வீசி படுகொலை செய்ய சி.ஐ.ஏ திட்டம் தீட்டி வருகிறது என தெரிவித்துள்ளது.
உயிர்வேதியியல் பொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது நானோ நச்சுப்பொருட்களையும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு எனவும் வடகொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நானோ திட்டத்தை பயன்படுத்துவதால் நேரிடையாக வட கொரியா ஜனாதிபதியை தாக்கும் தேவை இருக்காது எனவும், தாக்குதல் நடத்தப்பட்டதன் 6 அல்லது 12 மாதங்களுக்கு பின்னர் அதன் தாக்கம் தெரிய வரும் என்பது நானோ தாக்குதலின் சிறப்பு என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் வட கொரியா ஜனாதிபதிக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் இந்த பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி இந்த சதி திட்டம் குறித்து வட கொரியாவிடம் சிக்கிய அமெரிக்க உளவாளி ஒருவர் ஒப்புக்கொண்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வட கொரியாவின் இந்த குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு நிஜத்தன்மை உண்டு எனவும், சிக்கிய உளவாளி யார் எனவும், சதி திட்டம் முறியடிக்கப்பட்டதா எனவும் எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் போர் சூழலை எதிர்கொள்ளும் வகையில் வட கொரியா தமது நாட்டு மக்களை குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றிய வண்ணம் உள்ளது.