‘எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை’. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்று பார்க்கலாம்.
1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
2. ”பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.
3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.
4. தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.
6. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.
7. ஆண், பெண் இருவரும் ‘உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ’ என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.
8. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
10. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.