புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கு விசாரணையானது யாழ் மேல் நீதிமன்றில் அடுத்தவாரமளவில் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் தற்போது கொழும்பு உயர்நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது எனத் தெரிய வருகிறது..
கொழும்பு உயர்நீதிமன்றில் ட்ரயல் அட்பார் முறையில் மூன்று நீதிபதிகளின் கீழ் வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளன. கொழும்பு உயர்நீதிமன்றில் வழக்கு மாற்றமானால், பெரும்பாலும் வழக்கு நீர்த்துப்போகும் என்பதினால், மீண்டும் வழக்கு விசாரணையானது யாழ் மேல் நீதிமன்றிலே இடம்பெற வேண்டுமென வலியுறுத்தி இன்று மாலை நான்கு மணிக்கு அமைதியான விழிப்புணர்வு ஊர்வலமொன்று புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
பெருங்காடு கந்தசுவாமி கோவிலடியில் இருந்து நான்கு மணிக்கு ஆரம்பமாகிய அமைதி ஊர்வலமானது, ஐந்து முப்பது மணியளவில் ஆலடி சந்தியில் நிறைவுற்று, ஜனாதிபதி, பிரதம நீதியரசர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்க்கான மகஜரில், “பொதுமக்களின் கையெழுத்து” பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது பூர்த்தியானதும், நாளை உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென தெரிய வருகிறது.
மேற்படி அமைதி ஊர்வலத்தில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் உட்பட குறிப்பிட்டளவு மக்கள் கலந்து கொண்டு, தமது கண்டனத்தை பதிவு செய்ததுடன், “யாழ். நீதிமன்றுக்கு, வழக்கு மீண்டும் மாற்றப்படும் வரை”, தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இதுபோன்ற அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள் தொடருமென, புங்குடுதீவு மக்கள் சார்பாக “ஏற்பாட்டுக்கு குழுவினர்” தெரிவித்துள்ளனர்.