ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சை 7 ரன்னில் வீழ்த்தி பஞ்சாப் அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது.
தொடக்க வீரர் விர்த்தி மான் சகா 55 பந்தில் 93 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மேக்ஸ் வெல் 21 பந்தில் 47 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), குப்தில் 18 பந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்லகன், பும்ரா, கரன்சர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
231 ரன் இலக்கை மும்பை இந்தியன்ஸ் நெருங்கி வந்து தோற்றதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 ரன்னில் வெற்றி பெற்றது.
லெண்டில் சிம்மன்ஸ் 32 பந்தில் 59 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), போல் லார்ட் 24 பந்தில் 50 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 23 பந்தில் 38 ரன்னும் (7 பவுண்டரி), ஹர்த்திக் பாண்ட்யா 13 பந்தில் 30 ரன்னும் (4 கிச்சர்) எடுத்தனர். மொகித்சர்மா 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, அக்விர் பட்டேல், மேக்ஸ்வெல், திவேதியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து உள்ளது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-
நான் கேட்சை தவற விட்டால் அதற்குரிய இழப்பு ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தேன். 2 கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை தவற விட்டோம். ஆனால் இறுதியில் ஆட்டத்தை நிலை நிறுத்தி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தீப் மற்றும் மொகீத்சர்மாவுக்கு தான் எல்லா பாராட்டும் சேரும்.
கடைசி 2 ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நெருக்கடியான நேரத்தில் எங்களது திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தினோம்.
நாங்கள் இன்னும் பிளேப் ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறோம் என்பது மகிழ்ச்சியானதே. நாங்கள் அடுத்த ஆட்டத்திலும் வெல்ல வேண்டும். பின்பக்க வழியாகத்தான் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டியது வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தோல்வியால் மும்பை இந்தியன்சுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருந்தது. மும்பை அணிக்கு ஏற்பட்ட 4-வது தோல்வியாகும். இதுகுறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்த தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் நாங்கள் கடுமையாக போராடினோம். போல்லார்ட, ஹர்த்திக் பாண்டயாவும் அதிரடியாக ஆடியபோது ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது. பாண்ட்யா ‘அவுட்’ ஆன போது ஒருவரால் மட்டும் அதிரடியாக ஆட முடியாது. வீரர்கள் அனைவரும் வெற்றிக்காக போராடியதை பாராட்டுகிறேன்.
இந்த ஆடு களத்தில் பந்து வீச்சாளர்களை குறை சொல்ல இயலாது. ஆனால் சில தவறுகளில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பஞ்சாப் அணி கடைசி லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே அணியை 14-ந்தேதி சந்திக்கிறது. மும்பை அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை சந்திக்கிறது.