காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாக வாரியக் குழு தலைவர் டி.எஸ். ராணா நேற்று கூறும் போது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை இப்போது சீராகி உள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்றார்.
சமீப காலமாக சோனியா காந்திக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் நவம்பர் மாதமும் காய்ச்சல் காரணமாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஒரே மருத்துவமனையில் அனுமதிக்க படுவதும். மருத்துவ விவரங்களை அறிக்கைகளாக வெளியிடுவதும் மக்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்துவதாக பேசப்படுகிறது.