இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான வருகை தொடர்டபான விவாதங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சர்வதேச பௌத்த பீடத்தின் வெசாக் தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால அழைத்திருந்தார்.
இலங்கைக்கு மோடி வரப்போகின்றார் என்றதும் சிங்கள இனவாதிகள், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பினார்கள். அதாவது,இந்தியாவுடன் திறந்த பொருளாதார ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசாங்கம் செய்யப்போகின்றது என்றும், திருகோணமலையில் இருக்கும் பாரிய எண்ணைக் குதங்களை இந்தியாவுக்கு வழங்கப் போகின்றது என்றும் கூறினார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உழைப்பாளர் தினத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் வரும்போது ஒவ்வொரு சிங்களவரும் கறுப்புக் கொடியை தமது வீட்டில் கட்டி எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மோடியின் இலங்கை விஜயம் சர்வதேச வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்,பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலும்,டிக்கோயாவிலும் மோடி உரையாற்றிய சந்தர்ப்பங்களில் இலங்கையின் பொருளாதார எழுச்சியைப் பற்றியும், அதற்கு இந்தியாவின் உதவிகள் பற்றியுமே மிக அதிகமாக குறிப்பிட்டார்.
இலங்கையில் மோடி பல தரப்பினரையும் சந்தித்திருந்தார் அந்த சந்திப்புக்கள்,அவசியமும், அர்த்தமும் நிறைந்தவையாக இருந்தது. அதேபோல் இந்தியப் பிரதமர் மோடியின் வருகையும் அதனோடு ஒட்டியதாக நடைபெற்ற சில கவனிக்கத்தக்க சம்பவங்களும் முக்கியமானவையாகும்.
மோடி இலங்கைக்கு இரண்டாவது தடவையாக வருகை தந்திருந்தார். இந்த வருகையின்போது அவருக்கு வழங்கப்படும் அரச தலைவர்களுக்கான மரியாதை அணிவகுப்பு நடைபெறவில்லை. அதற்கு காரணம்,1987ஆம் ஆண்டுமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்திருந்தபோது அணிவகுப்பு மரியாதையின்போது கடற்படை சிப்பாய் விஜயமுனி தனது துப்பாக்கியால் ராஜிவ்காந்தியை தாக்கினார்.அந்தத் தாக்குதலை சுதாகரித்துக்கொண்ட ராஜிவ்காந்தி அவர்கள், குணிந்து கொண்டு ஒரு கையால் அடியை தடுத்தபோது அந்த அடி ராஜிவ்காந்தியின் இடதுதோழில் பட்டது.
அந்தச் சம்பவமானது இலங்கையின் வரலாற்றில் கறுப்புப் பதிவாகவே இருந்துவருகின்றது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் இந்தியத் தலைவர்களுக்கு இலங்கையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை என்பது தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றது. அந்த எச்சரிக்கை உணர்வு இப்போது 40 வருடங்களுக்குப் பிறகும் மோடிவரை தொடர்வதையே உணர முடிகின்றது.
மோடியின் வருகைக்கு முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இம்முறை 600 அதிகாரிகள் முன் விஜயம் செய்திருந்தார்கள். முதன்முறையாக மோடி இலங்கை வரும்போது 300 அதிகாரிகளே வருகை தந்திருந்தார்கள். இம்முறை வருகை தந்திருந்த 600 அதிகாரிகளில் பல பிரிவுகளாக அவர்கள் நாட்டின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது முக்கியமாகும்.
மோடி கொழும்பிலும்,டிக்கோயாவிலும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டாலும்,இந்திய அதிகாரிகள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் கூடுதல் அவதானிப்பைச் செலுத்தியிருந்தனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் மோடியையும் மோடி சந்தித்தார் என்பதும் கலந்துரையாடினார் என்பதும் சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளாகவே பார்க்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மோடி சந்தித்ததானது மோடியின் இலங்கை விஜயத்தை முக்கியத்துவமானதாக மாற்றியமைத்தது. தனது ஆட்சியை கவிழ்த்ததில் இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ சதி செய்தது என்று மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்கள். மகிந்த அமர்ந்திருந்த ஒன்றினைந்த எதிர்க்கட்சியின் மேடையில் விமல் வீரவன்ச,’மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள மக்கள் கறுப்புக்கொடி கட்டுங்கள்’ என்று கூறினார். இந்த நிலையில் மோடிக்கும், மகிந்தவுக்குமான சந்திப்பு பல கேள்விகளுக்கு வித்திடுகின்றது.
நிச்சயமாக மோடியும், மகிந்தவும் சந்தித்ததை ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் வரவேற்கமாட்டார்கள். கடந்த மேதினத்தின் பின்னர் மகிந்தவின் அரசியல் எழுச்சி பிரகாசிக்கத் தொடங்கியிருப்பதற்கு மோடி அங்கீகாரம் கொடுத்திருப்பதாகவே நல்லாட்சியாளர்கள் எரிச்சலடைந்திருப்பார்கள்.
மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கும் மகிந்தவுக்கு இந்தியா முன்கூட்டியே தனது நேசக்கரத்தை நீட்டுவதற்குமோடி போட்ட அட்சாரமா அந்தச் சந்திப்பு என்று நல்லாட்சியினர் திகைத்தப்போயிருக்கின்றார்கள். மறுபக்கமாக இலங்கையில் நடந்து முடிந்த போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளியாக கருதப்படவேண்டிய மகிந்த ராஜபக்சவை,மோடி சந்தித்ததன் ஊடாக, இந்தியாவுக்காகத்தான் புலிகளை அழித்தேன் என்று மகிந்த கூறிய கருத்தை உறுதி செய்திருப்பதாகவே வடக்கு – கிழக்குத் தமிழ்மக்கள் கருதியிருப்பார்கள்.
மகிந்த ராஜபக்சவை அரசியலிருந்து அமைதியாக இருக்கும்படியும்,அவரது சகோதரரான பசில் ராஜபக்சவை அரசியலிலிருந்து விலகி இருக்கமாறும்,மற்றுமொரு சகோதரரான கோத்தபாயவை சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பில் நியமித்து சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்தால் அதை சர்வதேச சமூகம் வரவேற்கும் என்றும் குறிப்பாக இந்தியா இவ்வாறான முடிவையே விரும்புகின்றது என்றும் கூறப்படுகின்ற கதைகளுக்கும், மோடி – மகிந்த சந்திப்புக்கும் தொடர்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரவில் நடந்த அந்தச் சந்திப்பு தொடர்பான வியடங்கள் இருட்டு அறைக்கள் மறைக்கப்பட்டிருந்தாலும்,இந்தியாவின் திட்டத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முண்டியடிக்கும் இலங்கையில் அக்கறையுள்ள நாடுகளும் மகிந்தவுடனான தமது உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கு நிச்சயம் காய்களை நகர்த்துவார்கள்.
டிக்கோயாவிற்கு சென்றிருந்த மோடி கிளங்கன் வைத்தியசாலையைத் திறந்து வைத்து உரையாற்றும்போது,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த ஸ்தாபகத் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களையும். அந்தக் குடும்பத்திற்கும் இந்தியாவுக்குமிடையேயான உறவுகள் தொடர்பாக பெருமிதமாக உரையாற்றியிருந்தார்.
மோடியின் அந்த உரையானது, நல்லாட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு,’ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சப் பதவியே கொடுக்கக் கூடாது என்றும், அப்படி அமைச்சுப் பதவியை ஆறுமுகனுக்கு இந்த அரசாங்கம் வழங்கினால் தமிழ் முற்போக்குக் கூட்டணியாக இருக்கும் தாம் அமைச்சுப் பொறுப்புக்களை ராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’என்றுகூறிவருகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிர்மறையாகவே மோடியின் உரை அமைந்தது. மோடியின் உரையானது,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. ஆறுமுகன் தொண்டமானுக்கும் செல்வாக்கை உயர்த்தியிருக்கும்.
இந்திய அரசாங்கமே புகழும் தலைவரையும், அவர் வழி வந்தவர்களையும், அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட எத்தனிக்கும் தரப்புக்கள் யார் என்பதையும் அந்த மக்கள் புரிந்து கொள்வதற்கு அதிகம் நேரம் தேவையாக இருந்திருக்காது என்று கூறும் மலையக புத்திஜீவிகள்,ஆறுமுகனும் அமைச்சராக இருந்தால் அதுவும் மலையகத்திற்குத்தானே நல்லது. நல்லாட்சியில் அரசியல் எதிராளிகளை பலிவாங்காதீர்கள். யாரையும் காட்டிக் கொடுக்காதீர்கள்.நீங்கள் அமைச்சர்களாக இருந்து கொண்டு போட்டியிட்டு மக்களுக்கு உதவி செய்யுங்கள். மலையக மக்களின் வாழ்க்கையை போட்டி போட்டு உயர்த்துங்கள் அதைவிடுத்து குறுகிய சிந்தனையுடன் இருக்காதீர்கள் என்றும் கூறுகின்றனர்.
இறுதியாக மோடி இந்தியாவுக்கு பயணமாவதற்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்திருக்கின்றார். அந்தச் சந்திப்பில் மோடி ஆங்கிலத்தில் உரையாடாமல் ஹிந்தியில் ஏன் உரையாடினார் என்பதே கூட்டமைப்பின் சார்பில் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக அமைந்திருந்தது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தன்,சுமந்திரன், ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிரேமச்சந்திரனும் ஆங்கிலத்தில் உரையாற்றுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் அந்த சந்திப்பில் திட்டமிட்டபடி எல்லோரும் உரையாற்ற முடியாதிருந்ததாகத் தெரியவருகின்றது. இந்தியாவின் தற்போதைய பிராந்திய அரசியல் நகர்வையும். இலங்கை தொடர்பான ஏமாற்றங்களையும் புரிந்து கொள்ளாமல், சமஷ;டி அடிப்படையில் தீர்வு என்றும்,இந்தியாவிலிருப்பதுபோல் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அலகுக்கு தேவை என்றும் மோடியிடம் முன்வைக்கப்பட்டபோது,அது பற்றியெல்லாம் இலங்கை அரசாங்த்திடம் பேசி இருக்கின்றேன் என்று மோடி கூறியதைக் கேட்டுக்கொண்டிருப்பதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் வேறு எதையும் கூறுகின்ற சூழல் அங்கு இருக்கவில்லை.
தமிழ் மக்கள் தமது சொந்த குடியிறுப்பு நிலத்துக்குத் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்றும் மாதக்கணக்காகப் போராடிக்கொண்டிருக்கையில், இலங்கை வருகை தந்த மோடி வடக்கு கிழக்கு மாகாணத்திற்கும் வந்து ஆறுதல் கூறியிருக்கலாம் என்ற கொதிப்பில் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள். இந்தநிலையில் இந்த விடயங்களுக்கு தீர்வை மோடியிடம் கேட்டதாக கூட்டமைப்பினர் கூறியிருப்பது தமிழ்மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
இலங்கை அரசாங்த்திடம் அரசின் பங்காளிகள் என்றவகையில் உரிமையுடன் கேட்டுப்பெற வேண்டிய தீர்வுகளை மோடியிடம் கேட்பதால்,மோடி என்ன தீர்வைத்தர முடியும். காணாமல் போனவர்களையும்,படையினர் அபகரித்த மண்ணையும் மோடி இந்தியாவிலிருந்து கப்பலிலா அனுப்பி வைக்க முடியும்? என்ற கௌ;விகளும் எழுகின்றது.
மோடியிடம் அரசாங்கம் நோயாளி காவும் வாகனம் கேட்டது, 100 வாகனம் தருகின்றோம் என்றார். தமிழகம் ஊடாக சிங்களவர்கள் வாரணாசிக்குப் பயணமாவது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று அரசாங்கம் கூறியது. கொழும்புக்கும், வாரணாசிக்கும் நேரடியாகப் பயணிக்க எயார் இந்திய விமான சேவையை ஆரம்பிப்பதாகக் கூறினார். மலையகத்தில் வீடுகள் வேண்டும் என்று கேட்டார்கள். 10,000 வீடுகளைக் கட்டித்தருகின்றேன் என்றார். சுகாதார வசதிகள் இல்லை என்றார்கள் அதையும் அமைத்துத் தருகின்றோம் என்றார். இப்படி மோடியின் உடனடி பதில்களுக்கு தோதான கேள்விகளுக்கே முக்கியத்துவம் இருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மோடி வருகை தருவதைத் தவிர்த்ததும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை அட்டவனைப்படி சந்திக்காமல் போகும் வழியில் சாக்குப்போக்காகச் சந்தித்ததும்,அதில் மோடி கூறிய பதில்களும்,இந்திய மத்திய அரசுக்கு இலங்கை தமிழ்மக்களை விடவும், சிங்கள மக்களை சமரசப்படுத்துவதும், இந்தியாவிற்கு வரவேற்பு அதிகமுள்ள பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவதுமே சமகால அவசியமாக இருக்கின்றது என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.