ஏமனில் காலரா நோய் பரவி வருவதையடுத்து சுமார் 115 பேர் இதற்கு பரிதாபகமாக பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஏமனில் பரவி வரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேடி வரும் நோயாளிகளை கவனிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27-ம் திகதி முதல் இன்று வரை 115 பேர் காலராவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 8,500 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஏமனில் சவுதி ஆதரவு அரசுக்கும் இரான் ஆதரவு ஹுதி போராளிகளுக்குமிடையே கடும் சண்டை நடைபெற்று வருவதால் மருத்துவமனைகள் முழுதும் இயங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டுமின்றி சவுதி ஆதரவு அரசுக்கும் இரான் ஆதரவு ஹுதி போராளிகளுக்குமிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் காலரா நோயாளிகள் வரத்து நெரிசலாகியுள்ளது. ஒரே படுக்கையில் 4 காலரா நோயாளிகளை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான மருத்துவமனைகள் புகார் தெரிவித்துள்ளன.
தெற்கு சூடான், நைஜீரியா, சிரியா ஆகிய நாடுகளுடன் மனிதார்த்த நெருக்கடி மிகுந்த பட்டியலில் உலகச் சுகாதார அமைப்பு ஏமனையும் சேர்த்துள்ளது.
மட்டுமின்றி ஏமனில் உள்ள 17 மில்லியன் மக்கள், அதாவது அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு காலரா தொற்று அச்சுறுத்தல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டுமின்றி ஏமனில் ஓராண்டுக்குள் இது இரண்டாவது முறையாக காலரா நோய் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.