ஜெனீவாத் தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த அமெரிக்காவின் ஒத்தாசை அவசியம் என வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவின் காங்கிரஸ் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பில் ஜோன்சனிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சிஉறுப்பினரும் சிறிலங்கா தொடர்பான விடயங்களை பரிசீலிக்கும் அமைப்பின் தலைவருமான பில் ஜோன்சன் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடமாகாண மக்களின் நிலைமைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இவர்கள் வருகை தந்திருந்தனர் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அவர் அரசியல் ரீதியான பயணம் எப்படி இருக்கின்றது என கேள்வியை எழுப்பியிருந்தார்.
பல இடங்களில் எமது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். துணிவான சில நடவடிக்கைகளை எடுக்காமையினால், அரசியல் காரணங்களுக்காக நாம் எடுக்க வேண்டிய எமது நடவடிக்கைகளை மற்றும் முக்கியமான செயற்பாடுகளை எடுக்காமல் இருந்தால், மக்களிடையே ஒரு விதமான விசனத்தினை ஏற்படுத்தும்.
இதுவரையில் மக்களின் காணிகளை திருப்பிக் கொடுக்காமை, மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, காணாமல் போனோர் பிரச்சினைகள் இவ்வாறு பல விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
நடைபெற்று முடிந்த மார்ச் ஜெனிவா கூட்டத்தின் போது, 2 வருட காலம் சிறிலங்காவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசும் இணைந்து தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். என்ன விடயங்கள் நடைபெறுகின்றன. எப்போது நடைபெறுகின்றது. என்ன விடயங்கள் நடைபெறவில்லை.
குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவேற்ற முடியுமா? 2 வருட காலத்தில் கூட எடுத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என அவதானிக்க வேண்டும்.
அத்துடன், இலங்கை அரசாங்கம உலக நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தினை எப்படியாவது சரி நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவற்றினை நடைமுறைப்படுத்தவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை அவசியமென்பதனையும் வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.