மியன்மார் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமக்குள்ள பிரதான சவாலாகும். ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் இலங்கையின் கண்டி மாநகரத்தை பார்ப்பதற்கு நான் ஆவலாக உள்ளேன் என மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங் சாங் சூகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஆங் சாங்சூகிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
ஒரே கரையோரம் – ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங்சாங் சூகியை சந்தித்து பேசினார். இதன்போது மேற்கண்டவாறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை பலப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களால் அவதானம் செலுத்தப்பட்டது
இதன்போது மியன்மார் அரச தலைவர் குறிப்பிடுகையில்,மியன்மார் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமக்குள்ள பிரதான சவாலாகும்.
ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து கண்டி மாநகரத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மியன்மார் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார்.
அத்துடன் இதற்கான இலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினை விரைவில் மியன்மாருக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் உறு தியளித்தார். மேலும் ஆங்சாங் சூகியை இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.