கேப்பாப்புலவு இராணுவ முகாமை மாற்றுவதற்காக இராணுவம் கோரிய 5மில்லியன் ரூபா நிதியை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் ஏனைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் விரைவில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை சந்திக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டு அதன் பிரகாரம் அந்த முகாம் அமைந்துள்ள காணிகள் ஏப்ரல் 29ஆம் திகதி மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் குறித்த கூட்டத்தின்போது கேப்பாபிலவில் 190ஏக்கர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு நடைபெறும் மக்களின் போராட்டங்கள் குறித்தும் கூறப்பட்டது.
அதன்போது தாம் வேறொரு இடத்திற்கு செல்வதனால் அதற்கு நிதி தேவையாகவுள்ளது. தமது முகாமை அகற்றி மாற்றிடத்தில் அமைப்பதற்கு 5மில்லியன்கள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படுமிடத்து ஆறு வாரங்களில் தாங்கள் அவ்விடத்தை மீளக் கையளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்கள்.
இவ்வாறான நிலையில் எனது அமைச்சினால் குறித்த இராணுவ முகாமை மாற்றுவதற்காக 5 மில்லியன் ரூபா நிதியானது பாதுகாப்பு அமைச்சிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிச்சயம் பாதுகாப்பு தரப்பினர் மாற்றிடத்திற்கு முகாமைக் கொண்டு சென்று பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடடுவிப்பார்கள்.
அதேநேரம் ஏனைய பகுதிகளில் உள்ள காணிகள் விடுவிப்பு குறித்து மீண்டும் இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்திக்கவுள்ளேன். ஆவரிடத்தில் அக்காணிகள் விடுவிப்பு அதற்கான காலப்பகுதி என்பன தொடர்பில் கலந்துரையாவுள்ளேன் என்றார்.