பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற மக்ரோங், அந்நாட்டின் புதிய பிரதமரை இன்று (திங்கட்கிழமை) நியமிக்கவுள்ளார்.
ஜனாதிபதியெனும் வகையில் மக்ரோங் மேற்கொள்ளவுள்ள முதலாவது உத்தியோகபூர்வ நடவடிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வகையில் பிரதமர் ஒருவரை நியமிப்பது மக்ரோங்குக்கு உள்ள முக்கியமான பொறுப்புக்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பிரதமரை நியமித்தமையின் பின்னர், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கலை சந்திக்கும் பொருட்டு மக்ரோங் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இளவயதிலேயே பிரான்ஸின் ஜனாதிபதியாகிய பெருமை 39 வயது நிரம்பிய மக்ரோங்கையே சாரும். எலிசீ மாளிகையில் நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற மக்ரோங், இழந்துபோன தன்னம்பிக்கையை பிரான்ஸ் மீளப்பெறும் என உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.