கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைளை தொடர்ந்து சோதனை செய்து வரும் வடகொரியாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ், பியோன்கங் அணு ஆயுத சோதனை முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வடகொரியாவின் இத்தகைய செயல்கள், ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தீர்மானத்திற்கு எதிராக, அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கேடு விளைவிப்பதாக இருப்பதாக கட்ரஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து ஐ.நா செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
வடகொரியா நேற்று சோதித்த ஏவுகணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அணுஆயுத சோதனை முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும், அண்டை நாடுகளுடனான போர் பதற்றத்தை தவிர்க்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா.விதிகளின் படி அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார தடை விதித்தும், அதை மீறி வடகொரியா அணுஆயுத சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
வட கொரியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனத்தை அடுத்து, இன்றோ அல்லது நாளையோ பாதுகாப்பு கவுன்சில் கூடி வட கொரிய விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.