லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஆயிரம் லண்டன் பவுண்ஸ்களை நுட்பமான முறையில் திருட வந்த யுவதியால் இழந்துள்ளார்.
இச் சம்பவம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காரைநகரில் உள்ள தனது உறவினர்களுக்கு கொடுப்பதற்காக லண்டனில் குறித்த குடும்பஸ்தரிடம் ஆயிரம் பவுண்ஸ்களை அவரது நண்பர் கொடுத்துள்ளார்.
அப் பணத்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்த குறித்த குடும்பஸ்தர் தனது தாயிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே சென்ற சமயத்தில் காரைநகரில் இருந்து அப் பணத்தைப் பெறுவதற்காக வந்துள்ளதாக இளம் பெண் ஒருவர் அவர்களின் வீட்டுக்குச் சென்று தாயாரிடம் பணத்தைப் பெற்று சென்றுவிட்டாள்.
தான் பணத்தை கொடுத்தமை தொடர்பாக வீட்டுக்கு வந்த மகனிடமும் தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சில மணித்தியாலங்களில் உண்மையாக பணம் பெற வேண்டிய காரைநகரைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த குடும்பஸ்தர் அருகில் உள்ள வீட்டில் சி.சி.ரிவி கமராவை பரிசோதனை செய்த போது பெண் ஒருவர் வந்து போனது தெளிவான முகத்துடன் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குடும்பஸ்தர் இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட ஆயத்தமாகியுள்ளார்.