தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தவர்களை தன் கண் முன்னால் தூக்கிலிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
அவரது முகத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். சடலத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுச் சென்றதால் நாய்கள் சடலத்தை குதறி சிதைத்தன. ஒட்டுமொத்த இந்தியாவும் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அவள் எங்கள் வீட்டின் கண்ணுக்கினிய பொம்மை. நாங்கள் எங்கள் மகனைக் காட்டிலும் மகளை அதிகளவில் நேசித்தோம். அவளுடைய கனவுகளை நிறைவேற்ற இயன்றவரை முயற்சித்தோம்.
உடை, உணவு போன்ற சிறு தேவைகளில்கூட கவனம் செலுத்தினோம். வெளியூர் சென்று திரும்பும் போதெல்லாம் அவளுக்கு சிறிய பரிசு வாங்கிவருவது எனது வழக்கம்.
என் மகள் நன்றாகப் படிப்பாள். ஆசிரியையாக வேண்டும் என்பதே அவளது கனவு. ஆனால், என்னால் நிதியுதவி செய்ய முடியவில்லை.
எனது கடன் சுமையைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த மருந்துக் கடையில் வேலைக்குச் சென்றார்” எனத் தனது மகளைப் பற்றிய சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார் அவரது தந்தை.
எனது மகளைக் கொன்றவர்கள் வெறும் 5 நிமிடங்களில் அந்தக் கொடூரத்தை செய்துவிட்டனர். அவர்களை என் கண் முன்னால் தூக்கிலிட்டு கொல்லுங்கள்.
இதற்காக நான் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் காத்திருக்க முடியாது. என் மகள் ஆசைப்பட்டாள் என்றே இரண்டு நாட்களுக்கு முன் அவளுக்கு ஒரு சங்கிலி வாங்கிக் கொடுத்தேன்.
அவள் ஆசைப்பட்ட அந்த சங்கிலிதான் அவள் சடலத்தை அடையாளம் காட்ட உதவும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
எனது மகளுக்கு நேர்ந்த கொடுமை நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையைக் காட்டிலும் மோசமானது என்று கதறி அழுதுள்ளார் அவரது தாயார்.