புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தை குறைந்தபட்சம் ஒன்றரை கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 36வது வாரத்தில், குறை பிரசவமாக பிறந்த இந்தக் குழந்தை 1.2கிலோ எடைதான் இருந்தது.
மேலும் இன்சுலின் சுரப்பதிலும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குழந்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
குழந்தையை பரிசோதித்த போது, சர்க்கரையின் அளவு 500 வரை இருந்தது. சர்க்கரை நோயுடன் வந்த முதல் குழந்தை இதுதான். இதுபோல பிறக்கும் போதே சர்க்கரை இருப்பது 3 முதல் 5 லட்சத்தில் ஒரு குழந்தைக்குத்தான் வாய்ப்பு உள்ளது.
இதற்கு காரணம் மரபணுக்களாக இருக்கலாம் என்பதால், குழந்தையின் மரபணுக்கள் இங்கிலாந்து அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோர் நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துள்ளனர். இதனால் இதுபோன்ற நோய் மற்றும் சில குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது.
தற்போது இன்சுலின் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தையின் எடை 200 கிராம் அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.