தமிழ்நாட்டில் தன் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி (55), கணவரை இழந்து விட்ட இவருக்கு மனோஜ் (28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மனோஜ் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்ய மனோஜ் நினைத்திருந்த நேரத்தில் அதற்கு அவர் அம்மா ஜெயபாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் அம்மாவின் எதிர்ப்பை மீறி கடந்த 12ஆம் திகதி மனோஜ் அந்த பெண்ணை சென்னையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
அதன்பின்னர், நேற்று தனது அம்மாவை சமாதானம் செய்ய மனோஜ் தேனியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவை மனோஜ் வெகுநேரமாக தட்டியும் ஜெயபாரதி திறக்கவில்லை. பின்னர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.
ஜெயபாரதி வீட்டுக்கு வந்து பொலிசார் கதவை உடைத்து பார்த்த போது அவர் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும், ஜெயபாரதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்க கூடும் என தெரியவந்துள்ளது.
மகன் காதல் திருமணம் செய்த நாளில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறியுள்ள பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.