கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தி குத்து இடம்பெற்று சிலமணி நேரங்களிலேயே குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபருக்கும் தலைப் பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தமையால், அவரைக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் வைத்தியசாலையில் ஆவேசத்துடன் குழுமியிருந்துள்ளனர்.
எனினும் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிணவறைக்குள் செல்வதற்கு முயன்ற போது, அவர்களை தடுத்த கிளிநொச்சி பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கனகபுரம் வீதியில் கடையொன்றை குத்தகைக்கு நடத்திவந்த நபர் குறித்த கடையை நடத்த முடியாமல் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு முற்பணத்தை கேட்டுள்ளார்.
பலமுறை முற்பணத்தை கேட்டபோதும் திருப்பிக்கொடுக்காத காரணத்தினால், நேற்று வாக்குவாதம் முற்றி குறித்த நபருக்கும் கடையின் உரிமையாளருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது 5 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நாகராசா திருக்குமார் என்பவரை கடையின் உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் நாகராசா திருக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த நபரின் மனைவியான 40 வயதுடைய திருக்குமார் கிருஸ்ணவேணி என்பவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.