கி.பி. 354-வது ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தகாஸ்கா என்னுமிடத்தில் பிறந்தவரே புனித அகுஸ்தீனார். தனது தொடக்க கால வாழ்வில் சோம்பேறியாகவும், ஊர் சுற்றுபவராகவும் இருந்தார். மனம்போன போக்கிலே வழிநடந்து, ஒழுக்கமற்ற வாழ்வால் தன் ஆன்மாவை கறைப்படுத்தினார். தனது 19-வது வயதில் சிசரோ எழுதிய ஹேர்டென்சியஸ் என்னும் நூலை வாசிக்கிறார்.
அதில் ஈர்க்கப்பட்டவராய் உண்மையான ஞானத்தை தேடி ஓடினார். ஒரு நாள் தனிமையிலே தனது இல்லத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுவன் காட்சியில் தோன்றி, எடுத்துப்படி என்று மூன்றுமுறை சொல்லிவிட்டு மறைந்தான். அருகிலிருந்தது திருவிவிலியம். அதனை எடுத்து, உரோமையர் 12:12-ஐ வாசித்தார். அதில் “இரவு முடியப்போகிறது. பகல் அண்மையில் உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக” எனக் கூறப்பட்டு இருந்தது.
இதன் அர்த்தம் புரியாமல் தூய அம்புரோசியாரிடம் கலந்துரையாடல் செய்தார், அகுஸ்தீனார். இறுதியாக குருவாக மாறி, எழை- எளிய, பாமர மக்களுக்கு இயேசுவை எடுத்து சொல்ல வேண்டும் என்ற மனப்பாங்கோடு செயல்பட்டார். “உன் வாழ்க்கையில் நீ புரியும் செயல்களுக்கு நீயே பொறுப்பு. நீ புரியும் செயல்களுக்கு அழகையோ, அடுத்தவரோ பொறுப்பல்ல” என்கிறார். இவ்வாறாக இவரின் செயல்வடிவ மாற்றம், ஏராளமான மனிதர்களை இறைவனிடம் கொண்டு வந்தது.
தவக்காலத்தின் இடைப்பட்ட நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், உண்மையான மாற்றம் பெற்றவர்களாக வாழ இன்றைய நாள் அழைக்கிறது. மாற்றம் என்பது வெறுமனே வார்த்தையில் இல்லை. மாறாக செயலில் வெளிப்பட வேண்டும். இதனைத்தான் மத்தேயு 7:21-ல் “ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” எனப்பார்க்கிறோம். நமது வாழ்வு, செயல்பாடு, மிக்க வாழ்வாக திகழ வேண்டும். இயற்கையின் நியதியே காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப தன்னை வடிவமைத்து கொள்வதிலே அர்த்தம் பெறுகிறது.
இத்தவக்காலம் மனம் மாறிட ஒரு சிறப்பு அழைப்பாகும். அதாவது செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும், இனியும் இதுபோன்ற தவறுகள் செய்யாமல் உறுதி கொள்ளவும் அழைக்கிறது. நேர்மையாளர்களுக்காக இயேசு பாடுபடவில்லை; துன்பப்படவில்லை. மாறாக பாவியாகிய எனக்காகவே பாடுபட்டார்; துன்பப்பட்டார் என்பதனை உணருவோம். நமது உள்ளத்தை கிழித்து கொள்வோம்.
நமது உள்ளத்து கெட்ட நடத்தைகளான பரத்தமை, காமவெறி, பில்லி சூனியம், பகை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம், பொய்சாட்சி, பிறருக்குரியதை கவர்தல், களவு, தாய்-தந்தையரை மதியாமை போன்ற செயல்களை முழுமையாக விட்டுவிட முயற்சி எடுப்போம். நமது ஆன்மாவை ஆய்வுக்கு உட்படுத்தி, இயேசுவின் ஒப்புரவு அருளடையாளத்தாலும், அவரது இரக்கத்தாலும் கழுவி தூய்மைப்படுத்துவோம்.
பிறர் அன்பு, இரக்க செயல்கள், தேவையை உணர்ந்து கொடுத்தல், இறைவனுக்கு நேரம் கொடுத்தல், பிறருக்காக ஜெபித்தல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, மாற்றம் பெற்ற மனிதர்களாய் வாழ்வை அழகுப்படுத்துவோம். நமது செயல்வடிவ மாற்றமே உண்மையான, நிரந்தரமான மாற்றம் என்பதனை உணர்ந்து வாழ்வோம்.