சமீபத்தில் வெளியான `விவேகம்’ படத்தின் டீசர், ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், `விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த பரபரப்பில் அவரது ரசிகர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதன்படி அஜித் அவரது அடுத்த படத்தில் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அஜித் தற்போது `விவேகம்’ படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட இருப்பதாகவும், தனது அடுத்த படம் குறித்து அவர் இன்னமும் யோசிக்கவில்லை என்று அஜித்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க அஜித் தனது அடுத்த படத்தில் `பில்லா’, `ஆரம்பம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த விஷ்ணு வர்தன் உடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சோழர் கால கதையை மையமாக வைத்து எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள புதிய கதையை விஷ்ணு வர்தன் இயக்க இருக்கிறாராம். அந்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. `விவேகம்’ படம் வெளியாக உள்ள நிலையில், விரைவில் இந்த அறிவிப்பு வெளியானால், அது அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.