கனடிய மக்களுக்கு கனடா புள்ளிவிபரவியல் மற்றும் கனடிய புற்றுநோய் சங்கம் ஆகியவை தீங்கு விளைவிக்கும் ஊதா கதிர்வீச்சு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடா புள்ளிவிபரவியலினால் தொகுக்கப்பட்டுள்ள புதிய கணிப்பீடுகளின்படி இந்த கோடைகாலத்தில் ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்படும் பகுதிகளில் தோல் புற்றுநோய் அபாயமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு ஊதா கதிர்வீச்சு மண்டலத்திலும் மெலனோமாவின் ஒட்டு மொத்த அபாயம் 22-சதவிகிதத்தால் அதிகரிக்கின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொன்றியலை விட ரொறொன்ரோவில் வசிப்பவர்களிற்கு 16% அதிக அபாயம் இருக்கும் எனவும், எட்மன்டனை விட கல்கரி பகுதி மக்களுக்கு 38% பாதிப்பு எனவும் கனடா புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.
தினசரி UV index, குறித்து 41% கனடியர்கள் கவனம் செலுத்தவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் தோல் புற்று நோய் மிகவும் பொதுவானதாக உள்ளது எனவும் மேலும் இது பரவலாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 6,800 மெலனோமா நோயாளிகள் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளனர். சூரியனில் இருந்து வரும் யுவி வெளிப்பாடு மற்றும் தோல் பதனிடும் படுக்கைகள் போன்றன இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்க சன்ஸ்கிரீன்-குறைந்தது 30 SPF அல்லது அதற்கும் அதிகமான-உபயோகிப்பது மற்றும் சூரியன் யுவி குறியீடு மூன்று அல்லது அதிகமாக இருக்கையில் வெளியில் செலவழிக்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது சிறந்ததென பரிந்துரைக்கப்படுகின்றது.
நெருக்கமாக நெய்யப்பட்ட ஆடைகளை அணிதல் பரந்து விரிந்த விளிம்புகள் கொண்ட தொப்பிகளை அணிதல் சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.