தி.மு.க தலைவர் கருணாநிதி தனது வைரவிழாவில் பங்கேற்கவில்லை என, செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன் 60 வருடங்கள் நிறைவடைகின்றன. அதைக் கொண்டாடும் வகையில், தி.மு.க சார்பில் வைரவிழா நடத்தப்பட இருக்கிறது. இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார், கம்யூனிஸ்ட் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்கவில்லை’ என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், ‘மருத்துவர்கள் அனுமதித்தால் மட்டுமே கருணாநிதி பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.