“இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு, ‘ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்’ என்று கூப்பிட்டார்கள்” (மத்.20:30).
வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அந்த வழியிலே வருகிறதை அறிந்து ‘ஆண்டவரே, தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்’ என்று அதிக சத்தமாய் கூப்பிட்டார்கள்.
குருடர்கள் பேசாதபடி ஜனங்கள் அதட்டினார்கள். இயேசு நின்று அவர்களை தம்மிடத்தில் அழைத்து, ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
‘இறைவனே எங்கள் கண்களைத் திறக்க வேண்டும்’ என்றார்கள். இயேசு அவர்கள் மேல் மனதுருகி அவர்கள் கண் களைத் தொட்டார். உடனே பார்வையடைந்தார்கள். சகல ஜனங்களும் அவரை பார்த்து ‘இது என்ன அற்புதமான செயல்’ என்றார்கள்.
“அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து ‘ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்’ என்றான்”(மத்.8:2).
மிகவும் அருவருப்பான மனிதர்களைப் பார்த்தால் தேசத்து ஜனங்கள் ஒதுங்கி சென்றுவிடுவார்கள். அவர்களிடம் எந்த தொடர்பும் வைக்கமாட்டார்கள். ஆனால் குஷ்டரோகி ‘ஆண்டவரே’ என அழைத்தான். அவரை பணிந்து கொண்டான். இயேசுவால் தன்னை முற்றிலும் குணமாக்க முடியும் என்று விசுவாசித்தான். என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
பாரபட்சம் பார்க்காத இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு ‘எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு’ என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
மிகவும் பரிசுத்தமான கரம், மிகவும் தீட்டான உடலைத் தொட்டது. தீட்டான உடல் பரிசுத்தமாக மாறியது. சகல ஜனங்களும் ஆச்சரியப்பட்டு ‘இது என்ன அதிசயமான காரியம்’ என்றார்கள்.
“அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக் காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்” (மத்.9:2).
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை பார்த்து ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்றார். பின்பு, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ’ என்றார். உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப் போனான். ஜனங்கள் அதைக் கண்டு ‘வல்லமையான அதிகாரம் உடையவர்’ என்று அவரை மகிமைப்படுத்தினார்கள்.
“அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்” (லூக்.7:2).
நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து, ‘எனக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு கொடிய வேதனைப்படுகிறான்’ என்றான். இயேசு, ‘நான் வந்து அவனை குணமாக்குவேன்’ என்றார். நூற்றுக்கு அதிபதி, ‘ஆண்டவரே நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் விடுதலையாவான்’ என்றான்.
இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்கு பின் செல்லுகிறவர்களை பார்த்து, ‘மெய்யாகவே இஸ்ரவேலில் இப்படி ஒரு விசுவாசத்தை நான் பார்க்கவில்லை’ என்று சொன்னார். பின்பு நூற்றுக்கு அதிபதியை பார்த்து, ‘நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக் கடவது’ என்றார்.
கப்பர்நகூமில் ஒரு வார்த்தை சொல்ல, கானாவூரில் அந்த நேரத்திலே வேலைக்காரன் குணமானான். இதை கேள்விப்பட்ட ஜனங்கள் எல்லோரும் அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.
‘அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரை யும் குணமாக்கின படியினாலே ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள்’ (லூக்.6:19).
ஜெப ஆலயத்தலைவன் யவீரு என்ற மனிதன், இயேசுவின் பாதத்தில் விழுந்து ‘பன்னிரண்டு வயதுள்ள தன் ஒரே மகள் மரண அவஸ்தையாயிருக்கிறாள்’ என்று சொல்லி இயேசுவை தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான். அவர் புறப்பட்டு போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருங்கி வந்தார்கள்.
பன்னிரண்டு வருடமாக பெரும் பாடுள்ள ஒரு ஸ்திரீ ‘தன் சொத்துகளையெல்லாம் விற்று வைத்தியத்திற்கு செலவழித்தும் ஒருவராலும் குணமாக்க முடியாதிருந்த ஸ்திரீ’ இயேசுவின் பின்னால் வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய பெரும்பாடு நின்று போயிற்று.
அப்பொழுது இயேசு, ‘என்னைத்தொட்டது யார்? என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது’ என்றார். அந்த ஸ்திரீ நடுங்கி வந்து அவர் முன்பாக விழுந்து தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே தான் குண மானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
அவர், ‘மகளே திடன்கொள். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ’ என்றார். அவரை தொட்ட யாவரும் எல்லா வியாதியிலிருந்தும் குணமானார்கள்.
ஜனங்களுக்கு உண்டாகியிருந்த சகல வியாதிகளையும் நீக்கி விடுதலையாக்கினார். படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற மனிதர்களை இறைவன் தாங்குவார். ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’ என்றார். எப்படிப்பட்ட வியாதியிலிருந்தும் அவரால் விடுதலை தரமுடியும். நமக்கு அவர் சுகம் தருவார் என்ற விசுவாசம் இருந்தால் போதும். அவருடைய சிலுவையின் தழும்புகளால் குணமாவீர்கள். ஆமென்.