தமிழக மக்களால் “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக நிலவுகிறது.
1990-களில் ஜெயலலிதாவுடன் திடீர் உரசல் ஏற்பட்ட போதே அவரது ரசிகர்கள், “தலைவா… … அரசியலுக்கு வா… … உன் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்று தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பொங்கி எழுந்த தன் ரசிகர்களை ரஜினி அமைதிப்படுத்தினார்.
இதையடுத்து வந்த சட்ட சபை, பாராளுமன்றத் தேர் தல்களில் ரஜினி “வாய்ஸ்” கொடுத்தார். அந்த வாய்சுக்கு தனி முக்கியத்துவம் கிடைத் தது. என்றாலும் ரஜினி நேரடி அரசியலுக்கு வரவே இல்லை.
இடையில் அவரது கவனம் முழுவதும் மகா அவதார் பாபாஜி மீது திரும்பியதால் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்தார். என்றாலும் அவரது ரசிகர்கள் சோர்ந்து விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “தலைவா அரசியலுக்கு வா” என்று அழைத்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசியலில் தற்போது பெரிய தலைவர்கள் யாரும் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
அதுவும் ரஜினி தனது ரசிகர்களை 2 கட்டமாக சந்தித்து பேச முடிவு எடுத்ததுமே அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அதை அதிகரிக்க செய்யும் வகையில் கடந்த 15-ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின் முதல் நாளன்று அவரது பேச்சு அமைந்தது.
முதல்நாள் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினி அரசியல் குறித்து நிறைய பேசினார்.
நான் அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன் என்று பேசியதால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.
ரஜினியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்தும், எதிர்ப்பு கருத்தும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுடன் சந்திப்பு ரசிகர் களுடன் கடைசி நாளான இன்று மீண்டும் அரசியல் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரசிகர்கள் இன்று மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இங்கு வருகை தந்துள்ள என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு ஒழுக்கமாக இவ்வளவு கட்டுப்பாடாக இவ்வளவு நல்லா நீங்க வந்து இருந்தது நீங்கள் பழகியது, என்னை பார்த்தது அனைத்துக்கும் முதலில் என் நன்றியை சந்தோஷத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒழுக்கம்தான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். ஒழுக்கம் இல்லை என்று சொன்னால் எந்த காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அதை அப்படியே கடைபிடியுங்கள்.
நான் இந்த விழாவில் ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர்களுக்கும், பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் 4, 5 வார்த்தை பேசினாலே சர்ச்சை ஆகிவிடுகிறது. எனவே இன்னும் பேசினால் மேலும் சர்ச்சையாகிவிடும். ஆகவே நேரம் வரும்போது சொல்ல வேண்டியதை சொல்வேன்.
இங்கு நான் பேசியது 4 வார்த்தை. அது நான் என்னுடைய ரசிகர்களுக்கு சொன்னது. நான் அரசியலுக்கு ஒருவேளை வந்தால் நீங்கள் எப்படி இருக்கனும் என்று சொன்னது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.
அதற்கு எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாமல் உலகமே முடியாது. அதில் அரசியலில் எதிர்ப்புதான் முக்கியம்.
ஆனால் சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டரிலும் சில பேர் எழுதும் போது என்னை திட்டி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார்கள் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா? அவர் தமிழனா? அப்படிங்கிற கேள்வி எழுகிறது. எனக்கு இப்போது 67 வயது ஆகிறது. 23 ஆண்டுகள் மட்டுமே கர்நாடகத்தில் இருந்தேன். அதைவிட 44 ஆண்டுகள் தமிழகத்தில் தமிழனாகத்தான் இருந்திருக்கிறேன். உங்க கூடத்தான் இருந்தேன். கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும் என்னை நீங்கள் ஆதரித்து அன்பு கொடுத்து பேரும், புகழும், பணம் எல்லாவற்றையும் அள்ளி கொடுத்து என்னை நீங்கள் தமிழனாகவே ஆக்கி விட்டீர்கள்.
கர்நாடகத்தில் மராட்டியனயாக இருந்த என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சை தமிழன். எனது மூதாதையர்கள், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள்.
என்னை நீங்கள் எங்கேயாவது போ என்று தூக்கி போட்டால் இமயமலையில் போய்தான் விழுவேன். வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன். தமிழ் மக்கள் நல்ல மக்கள். நல்ல உள்ளங்கள் இருப்பதால் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ வைத்த தெய்வங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
சரி மற்றவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்வது. தளபதி மு.க. ஸ்டாலின் எனது நீண்டகால நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவரை சுதந்திரமாக விட்டால் ரொம்ப நல்லா செயல்படுவார். செயல்பட விடமாட்டேன் என்கிறார்கள்.
அன்புமணி ராமதாஸ் நல்லா படித்தவர். நல்ல விஷயம் தெரிந்தவர். நவீன மாக சிந்தனை செய்பவர். நல்ல கருத்துக்கள் சொல்கிறார். திட்டங்கள் வைத்திருக்கிறார்.
திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். சீமான் போராளி. அவருடைய பல கருத்துக்களை பார்த்து கேட்டு பிரமித்து போய் இருக்கிறேன். எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் சிஷ்டம் (அமைப்பு) கெட்டு போய் இருக்கிறதே? ஜனநாயகமும் கெட்டு போய் இருக்கிறதே? அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. மக்களின் மனதை மாற்ற வேண்டும். அமைப்பை மாற்ற வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.
ஒரு செடியை வளர்க்க வேண்டும் என்றால் குழி உரம், மண் கலந்து விதையை அதில் போட்டு மண்ணை மூட வேண்டும். நல்லா அழுத்தி அழுத்தி அமுக்க வேண்டும். வேர் நன்கு ஊற்ற வேண்டும். இப்படி செய்தால்தான் செடி நன்கு வளர்ந்து வெளியே வரும். நல்ல விதை வேண்டும்.
பகவான் புத்தர் பயணம் போய் கொண்டு இருந்தார். அப்போது சிலர் வந்து அவரிடம் கன்னா பின்னா வென்று பேசுவார்கள். ஆனால் புத்தர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பார். அவர்கள் போன பிறகு ஏன் இப்படி அமைதியாக இருக்கிறீர்கள். என்று புத்தரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், என்னை திட்டினார்கள். என்னை வெறுக்கவில்லை என்றார்.
பழைய காலத்தில் ராஜாக்கள் படை பலத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். மக்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் போர் என்று வரும் போது மண்ணுக்காக, மானத்துக்காக எல்லோரும் திரண்டு வருவார்கள்.
எனக்கும் கடமைகள் இருக்கிறது. வேலை இருக்கிறது. அதுபோல் உங்களுக்கும் கடமைகள் இருக்கிறது. ஊருக்கு போங்கள். குடும்பத்தை கவனியுங்கள். போர் என்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.