எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகராக இருந்து நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் சென்றவர் அண்ணாவால் லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆவார். அதைப்போல புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் நாட்டை ஆண்டார்கள். இவர்களை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்தார்கள். மக்கள் தலைவர்களாக வலம் வந்தார்கள்.
அம்மாவும், புரட்சித்தலைவரும் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தாலும் நடிகர்களை நாட்டு மக்கள் அங்கீகரித்து சரித்திரப் புகழ்பெற செய்தார்கள். தற்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருவாரா? வரமாட்டாரா? என்று மிக சிலர் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு சட்டத்தில் தடையில்லை, ஆனால் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்.ஜி.ஆர்., அம்மா, ஆகியோர்களைத் தவிர தமிழ் மண்ணில் வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை, இனிமேலும் வெற்றி பெற போவதில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிகப் பெரும்பான்மையான மக்களிடையே அதிருப்தி தான் நிலவுகிறது. காரணம் தமிழகத்தில் அவரும் அவர் குடும்பமும் முழுமையாக திரைப்படத் துறையில் வருமானம் ஈட்டுகின்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வப்போது புனிதமான அரசியல் துறையை ஊறுகாய் போன்று பயன்படுத்த நினைப்பதை மக்கள் ரசிக்கவில்லை. ஆனால் அவர் நடிப்பை ரசிக்கிறார்கள்.
அரசியலிலும் அவர் ஒரு நிலையான ஆதரவையும் தெரிவிப்பதில்லை. தற்போது 1996-ல் தவறான முடிவெடுத்தேன். அதனால் பலர் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள் என்று முதலில் நடந்த ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் புலம்புகிறார். முதலில் அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், என்று கூறுவதற்கே முடிவே இல்லாமல் காலம் கடந்துவிட்டது.
தற்போது 1996-ல் ரஜினி எடுத்த தவறான முடிவு என்ன? என்பதை வெளிப்படையாக கூறாதது ஏன்? இவரால் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்பதை அறிவிக்க தயாரா? தயங்குவது ஏன்? தி.மு.க., த.மா.கா. கூட்டணியைத் தான் ரஜினி கடந்த 1996-ல் ஆதரித்தார் என்பது குறிப்பாகும்.
இந்நிலையில் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று எந்த அளவுகோல் அடிப்படையில் ரஜினிகாந்த் பேசினார்? தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சனையான காவிரி, முல்லை பெரியார், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், தமிழ் ஈழப் பிரச்சனை, கெயில் நிர்வாக திட்டம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான் கையெழுத்திடப்பட்டது.
மக்கள் எதிர்க்கும் இந்த நிர்வாக திறமையை பாராட்டுகிறாரா? அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு செயல் இழந்த தலைவரை ரஜினிகாந்த் பாராட்டுவதன் உள்நோக்கம் என்ன?
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று இவர் பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா? ஏனெனில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர், அத்துறையில் உள்ள குறைகள் ஆயிரம் இருக்கிறது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது.
அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா? தமிழ் மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளாரா? நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன்? இந்தி எதிர்ப்பு குறித்து பேச தயாரா?
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வாயை திறக்காதது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா? அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும். ரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று பேசுவதை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை.
திராவிட இயக்க மண் எளிதில் யாரிடமும் ஏமாறாது, ஏமாற்றவும் முடியாது, ரஜினி அரசியல் களம் குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை, தமிழ் மக்கள் உணர்வுகளை கண்ணாடியாக பிரதிபலித்து மக்களின் வேண்டுகோளுக்காக இந்த அறிக்கையின் மூலம் மக்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.