‘அப்பா’ படத்திற்கு பிறகு சமுத்திரகனி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘தொண்டன்’. இப்படத்தில் சுனைனா, அர்த்தனா, விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வருகிற மே 26-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை முதல் திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கவிருக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆர்.மணிகண்டன் இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
‘அப்பா’ படத்தைப் போன்று இப்படத்திலும் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.