தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற பேச்சு நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க.- த.மா.கா. கூட்டணியை ஆதரித்து வாய்ஸ் கொடுத்த ரஜினி, அக்கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அதன் பின்னர் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் ரஜினி மவுனம் காத்தே வந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தில் 5 நாட்களாக நடந்த இந்த சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சுக்கள் அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன் என்று கூறிய ரஜினி, அரசியல் அமைப்பு (சிஸ்டம்) கெட்டுப் போய் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசியலில் எதிர்ப்பே மூலதனம். போர் (தேர்தல்) வரும் போது பார்த்து கொள்வோம் என்று அவர் கூறி இருப்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் அரசியல் பிரவேச முயற்சிகளுக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா டைரக்டர் கவுதமன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல தரப்பினரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இனி தமிழகத்தின் முதல்-அமைச்சராக நினைக்க வேண்டாம். எங்களை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்று கூறி ஆவேசப்பட்டனர்.
எனது மூதாதையர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று கூறும் ரஜினி தன்னை பச்சைத் தமிழன் என்று கூறி அடையாளப்படுத்தியதற்கும் கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படை என்கிற அமைப்பினர் அதன் தலைவர் வீரலட்சுமி தலைமையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக திரண்டனர். அமெரிக்க தூதரகம் அருகில் கூடிய அவர்கள் திடீரென ரஜினியின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.
அப்போது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள், சிறிய ரக குண்டு வெடித்தது போல வெடித்து சிதறின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமி உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். உருவ பொம்மையில் வெடி பொருட்களை வைத்த 4 பேரை மட்டும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி எதிர்ப்பாளர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று சென்னை மற்றும் மதுரையில் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் அருகில் ரஜினி ரசிகர்கள் இன்று ஒன்று கூடினர்.
வடசென்னை மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் திரண்ட ரசிகர்கள் ரஜினியின் கொடும்பாவியை எரித்த தமிழர் முன்னேற்றப் படையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சீமான், கவுதமன் ஆகியோருக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது.
அப்போது ரஜினி ரசிகர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். அப்போது ரஜினி ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் ரசிகர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலும் இன்று ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பஸ் நிலையம் அருகில் திரண்ட ரஜினி ரசிகர்கள் தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அப்போது அவரை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்தவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள் கடுமையாக சாடினர்.
எங்கள் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி அவர்கள் ஆவேசப்பட்டனர்.
இது தொடர்பாக வடசென்னை ரசிகர் மன்ற தலைவரான புருசோத்தமன் கூறியதாவது:-
எங்கள் தலைவர் ரஜினியை எதிர்ப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை. அவரது மூதாதையர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள்தான். அவர் பெண் எடுத்ததும் தமிழகத்தில்தான். அவர் இங்குதான் வசித்து வருகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ஈழ தமிழர் விவகாரத்தில் ரஜினி என்ன செய்தார் என்று பலரும் கேட்கிறார்கள். 1981-ம் ஆண்டு ரஜினி ரசிகர்கள் மெரினாவில் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தோம். இதனை ரஜினி நேரில் வந்து முடித்து வைத்தார்.
இதே போல இலங்கை தூதரகத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் அப்போது மனுவும் அளிக்கப்பட்டது. எனவே இன்று ரஜினி பற்றி பேசும் தலைவர்கள் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்.
நேற்று ஒரு அமைப்பு சார்பில் ரஜினியின் உருவ பொம்மை வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எங்களது மனதை புண்படுத்தி உள்ளது. எந்த விஷயத்திலும் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இதுபோன்ற எதிர்ப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாது.
எனவேதான் அந்த அமைப்பின் கொடும் பாவியை கொளுத்தி இருக்கிறோம்.
சீமான், இயக்குனர் கவுதமன் போன்றவர்கள் தங்களது எதிர்ப்பை ஜனநாயக ரீதியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்கள் அனைத்து ரசிகர்களையும் காயப்படுத்தி இருக்கிறது.
ரஜினிக்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறோம். இதற்காகதான் அவர் அனுமதியின்றி போராட்டத்தையும் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.