Ransomeware வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்களை முடக்கிய ஹேக்கர்கள் சம்பாதித்த தொகை வெறும் ரூ.32 லட்சம்தானாம்.
Ransomeware என்ற ஹேக்கர் குழுவினர் வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்களை முடக்கிய ஹேக்கர்கள் அதற்கான கீயை கொடுத்து சம்பாதித்தது சொற்ப அளவிலான தொகை தானாம்.
உலக நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை Ransomeware என்ற வைரஸ் ஒரு கை பார்த்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்கள் படாதபாடு பட்டன.
இதனால் ஒரு லட்சம் கணினிகள் முடக்கப்பட்டன. இது வெளிநாடுகளில் உள்ள ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம் என்றும், பணம் பிடுங்கும் நோக்கில் இவர்கள் செயல்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
முடக்கத்திற்கான தீர்வு
கணினிகளை முடக்கும் ஹேக்கர்கள் அந்த கம்ப்யூட்டர்களை லாக் செய்து விடுவார்கள். அதை ஓபன் செய்யும் கீ அவர்களிடமே இருக்கும். அவர்கள் அதைக் கொடுக்க பணம் கேட்பார்கள். பணம் கொடுத்தால் கம்ப்யூட்டர்கள் தப்பும். இல்லாவிட்டால் அப்படியே கிடக்கும்.
99 நாடுகள்
இதைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 99 நாடுகளில் உள்ள கணினிகளில் வைரஸ் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான பணம் நஷ்டமாகிவிட்டதாக தொழில் நிறுவனங்கள் தெரிவித்தன. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கணினிகளும் முடக்கப்பட்டன. இதனால் தேவஸ்தானத்தின் இணையதளமும் முடங்கியது.
பரவுவது எப்படி?
சமீபத்தில் உருவெடுத்த Ransomeware ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை லாக் செய்து விடும். குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் மிரட்டி பணம் பறித்து வந்தனர்.
எவ்வளவு பணம்
யாருக்கு பணம் போய் சேர்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாத ஃபிட்காயின் எனும் குறியாக்கம் செய்த பணங்களையே (encrypted money) இக்குழுவினர் பெற்று வந்த நிலையில், இவர்கள் சம்பாதித்தது எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை பிரிட்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Ransomeware குழுவினர் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளும் முகவரியை கண்டறிந்துள்ள இந்நிறுவனம், அம்முகவரியில் உள்ள கணக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) இருப்பதாக தெரிவித்துள்ளது.
செம காமெடி
வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான தொகைகளை இழந்துள்ளன. அவர்களிடம் ஹேக்கர்கள் கோடிக்கணக்கில் சம்பாத்திருப்பார்கள் என்று பார்த்தால் வெறும் 32 லட்சமே சம்பாதித்துள்ளது பெரிய காமெடியாக மாறியுள்ளது.
அட கிட்நா பயலே!
இதை பார்க்கும் போது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்திய கடத்தல்காரன் மணிவண்ணன் மற்றும் அவரது அசிஸ்டன்டுகளான செந்தில் மற்றும் பாண்டுவிடம் கவுண்டமணி, கார்த்திக் பேரம் பேசுவர். அந்த கிட்நா காமெடிதான் நினைவுக்கு வருது பாஸ்!