பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்குவதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை வெகு விரைவில் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
யார் எதிர்ப்பு வெளியிட்டாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய ஜனாதிபதி, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இந்த சட்டத்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வலைத்தளங்கள் ஊடாக சேறு பூசுதல், அவமதித்தல், போலி பிரச்சாரம் முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சில அரச ஊடகங்கள் தற்போது வரையில் வேறு நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதாகவும், அவற்றினை எதிர்வரும் காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.