மகன்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைந்ததாலும், தனக்கு முறை வைத்து சாப்பாடு போட்டதால் மனம் உடைந்ததாலும், வேதனை அடைந்த பெண்மணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி. அங்கு வசித்து வந்தவர் பாண்டியம்மாள். 58 வயதான இவரது கணவர் பெயர் பெரியகருப்பன். இவர்களுக்கு பால் பாண்டி, செல்வம் என இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அதே ஊரிலேயே தனித் தனியாக வசித்து வருகின்றனர்.
இரு மகன்களும் தங்களது பெற்றோருக்கு முறை வைத்து சாப்பாடு போட்டுள்ளனர். அதாவது சாப்பாட்டு நேரத்துக்கு இவர்களின் வீடுகளுக்களுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் ஒரு மகன் வீடு, அடுத்த வாரம் இன்னொரு மகன் வீடு என. இது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பாண்டியம்மாள் செல்வம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போகும் பொழுது மருமகள் வீட்டில் இல்லை. கதவைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனால் பெரும் அவமானமடைந்த பாண்டியம்மாள் கடும் வேதனையில் வீடு திரும்பினார். இந்த வயிற்றுப்பாட்டுக்காக இத்தனை அவமானமா என்று கூனிக் குறுகிய அவர் தீக்குளித்து விட்டார். அவரை தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியின் சாவுக்கு மகன்களே காரணம் என பெரியகருப்பன் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.