பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கட்டிப்போட வேண்டும் என பிரஜைகள் பலம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை குறைக்க முடியும். எனினும் துரதிஷ்டவசமாக பல விடயங்கள் காரணமாக அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
பாணந்துறை பிரதேசத்தில் கலகொட அத்தே ஞானசார என்ற பிக்கு தலைமையிலான அணியினர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப காரணமாக அமைந்தது.
கலகொட அத்தே ஞானசார தற்போது மீண்டும் மேடைக்கு வந்துள்ளார். ஞானசார என்ற இந்த பிக்கு தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இப்படியான சம்பவங்கள் நாம் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக மக்களின் விருப்பத்தை அறிய வாக்கெடுப்பு நடத்தும் போது கெடுதியான வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நாட்டில் ஒரு இனவாத தீ ஏற்படுமாயின் என்ன செய்தாலும் பயனில்லாமல் போகும். இதனால் கலகொட அத்தே ஞானசார போன்ற பிக்குகளை கட்டிப் போட வேண்டியுள்ளதாக காமி வியங்கொட கூறியுள்ளார்.