ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுற்றிவளைத்து தாக்கி அழிக்க போவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி அழைப்பை எடுத்து இந்த அச்சுறுதலை விடுத்த நபரை கைது செய்ய துரிதமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவிடம் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பௌத்த பிக்கு என தன்னை கூறிக்கொண்ட ஒருவர், தொலைபேசி அழைப்பை எடுத்து, ஜனாதிபதி முஸ்லிம்களுக்கும், தமிழர்களும் சேவகம் செய்யும் நபர் எனவும் பிக்குமாருடன் இன்று இரவு ஜனாதிபதியின் இல்லத்தை உடைத்து நொறுக்க போவதாக கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு நேற்றிரவு எடுக்கப்பட்டது என பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் பொறுப்புதிகாரி, கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
தொலைபேசி அழைப்புக்கு அமைய ஏதேனும் நடந்திருந்தால், தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் தடையாக அமைந்திருக்கும் எனவும், இந்த தொலைபேசி அழைப்பை எடுத்தவர் யார் என்பது குறித்தும், இனவாத்ததை தூண்டும் நபரா என்பதை அறியவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.