சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
முன்னதாக இப்போட்டி குறித்து விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வலுவான அணிகள் இருந்தால் மட்டுமே போட்டி அதிகமாக இருக்கும். தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான இரு துண்கள் போன்றவர்கள்.
பாகிஸ்தானுடனான போட்டி குறித்து எந்த அழுத்தமும் எங்களுக்கு கிடையாது. கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையில், மைதானத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களை கட்டுப்படுத்த எங்களால் முடியாது. பாகிஸ்தானுடனான போட்டி முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இந்தியா-பாக்கிஸ்தான் போட்டி தொடர்பான ஹைப் மற்றும் சூழல் எங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால், எங்களைப் பொருத்தவரை பிற அணிகளுடனான போட்டியைப் போன்றே பாகிஸ்தானுடனான போட்டியையும் பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந் தேதியும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 8-ந்தேதியும், கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 11-ந்தேதியும் சந்திக்கிறது.