பதப்படுத்தாத அல்லது சமைக்காத மீனைச் சாப்பிடுவதால் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என்று கனடா நாட்டு மக்களை டாக்டர்கள் எச்சரித்திருக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த டாக்டர்கள் சிலர், பதப்படுத்தாத அல்லது சமைக்காத மீனைச் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை ஒன்றை இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிட்டிருக்கின்றனர்.
அதில், 32 வயதான ஒருவர், ‘பச்சை’யான ஜப்பானிய உணவு வகையான ‘சுஷி’யை சாப்பிட்ட பின்னர் ஒட்டுண்ணித் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது அவர் ஏற்கனவே கடுமையான குடல் வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால் ஒரு வாரமாகப் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, குடல் பகுதியில் லேசான வீக்கம் இருப்பது தெரியவந்தது. அத்துடன் விலா எலும்புகளுக்குக் கீழ் வலியும் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் அவர் சுஷி உணவு சாப்பிட்டதாகக் கூறினார். எனவே அவருக்கு ‘அனிசாகியாசிஸ்’ பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். பதப்படுத்தப்படாத அல்லது சமைக்காத கடலுணவு அல்லது மீன்களைச் சாப்பிடுவதால் இந்நோய் ஏற்படும்.
இந்த நிலையில் டாக்டர்கள் அந்த நபரின் குடலில் ஆய்வு செய்தபோது, வளர்புழு ஒட்டுண்ணி அவரின் வீங்கிய குடலில் ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானிலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அறிக்கையில் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்கள், கடல் உணவுகளை பச்சையாக சாப்பிடுவதே சுஷி உணவாகும். ஜப்பானைத் தாண்டி தற்போது வெளிநாடுகளிலும் இது பிரபலமாகி வருகிறது. எனவே டாக்டர்கள் இதை கருத்தில்கொண்டு நோயாளிகளைக் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒருவரின் வயிற்றில் சிறிய ஒட்டுண்ணி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், கனடா நாட்டுக் கடை ஒன்றில் வாங்கிய வஞ்சிர மீனைச் சாப்பிட்ட பின்னர் அவருக்கு இப்புழு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சமைக்காத அல்லது பதப்படுத்தப்படாத மீனை முன்கூட்டியே ‘பிரீசருக்குள்’ வைக்காவிட்டால் இத்தகைய அபாய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான கனடா நாட்டு மாகாணங்களில், சமைக்காத மீன், உணவகங்களில் பரிமாறப்படுவதற்கு முன்னர் உறைநிலையில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.