கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா’ போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
18-19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை `த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தற்போது அதர்வா – நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்’ படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.
இந்நிலையில், கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஏ மாதவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.