களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய – மொரவகந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
புளத்சிங்கள போகாவத்த மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் பிம்புர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்து கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வழங்க விமானப் படையினரின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண் சரியக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலையால் தற்போது வரையில் 13 பேர் பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,அனர்த்தம் நிலைமை தொடர்பில் அறிவிக்க 011 2136226011, 2136136, 077 3957900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 பேரை காணவில்லை
குறித்த சம்பவத்தில் முன்னதாக நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களின் எண்ணிக்கை 30 பேராக அதிகரித்துள்ளது.
சம்பவத்தில் காணாமல் போன 30 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் இணைப்பு
நெலுவ பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தில் சிக்கிய மேலும் பலரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,இரத்தினபுரியிலும் ஐந்து இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே,தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு இணங்க 28 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர்.