தமிழகத்தில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் ஊழலற்ற அரசியலை செயற்படுத்தும் மனிதராக அவர் இருப்பார் என்றும் காந்திய மக்கள் இயக்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து, அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் அணுகுமுறைகளை பார்க்கும் போது அவருக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் கொள்கை அளவில் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அரசியலுக்கு வர ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்பதை தன்னால் வெளிப்படையாக கூற முடியும் என்றும் அவர் அரசியலுக்கு வந்து நேர்மையான ஊழலற்ற தூய்மையான அரசியல் அமைப்பை உருவாக்குவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும், தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் தனிப்பட்ட நபர்களும் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பதாகவும் அவர்கள், தாங்கள் அமர்ந்திருக்கக் கூடிய அரசியல் பல்லக்கை சுமக்கும் மனிதர் ரஜினிகாந்தாக இருந்தால் அவரை வரவேற்பார்கள் என்றும் இதன் போது தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார்.