ஆட்சியாளர்களை ஆட்சிபீடமேற்றியவர்களில் முன்னின்று உழைத்தவர்களான முஸ்லிம்களின் நிலைமை நல்லாட்சியில் பாதுகாப்பற்றதாகவும், பயங்கரமானதாகவும் மாறியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இனவாதக் குழுவாக தலைதூக்கிய பொதுபல சேனா, ஆட்சிமாற்றத்தின் பின்னர் சில காலம் பதுங்கி இருந்துவிட்டு இப்போது மீண்டும் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தாமே காவி அணிந்த பொலிஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொண்டு அடாவடித்தனங்களில் ஈடுபட்டார்கள். இவர்கள் இலங்கை நாடு பௌத்த சிங்கள நாடு என்றும், தமிழரும், முஸ்லிம்களும் வந்தேறு குடிகள் என்றும் கூறிவருவதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறுவிதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனா்.
அதில் அல்லாஹூவை நிந்திப்பது, ஹலால் சான்றிதழை இல்லாது செய்தது, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையை மறுதலிப்பது, கேலி செய்வது, பள்ளிவாசல்களைத் தாக்குவது, பேருவளையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்களைத் தாக்கியது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான நோலிமிட் போன்ற பிரபலமான வர்த்தக நிலையங்களை தாக்குவது போன்ற இனவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
நல்லாட்சியிலும், மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்கள். இறக்காமம் மாயக்கல்லி மலையில் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தியது, பொலன்னறுவையில் தாக்குதல், தம்பாலையில் தாக்குதல், சின்னவில்பட்டி ஓணகமவில் தாக்குதல், தோப்பூர் செல்வா நகரில் நீனாக்கேணியில் தாக்குதல், வெல்லம்பிட்டி கோகிலாவத்தை பள்ளிவாசல் மீது தாக்குதல், பாணந்துறை எலுவில் குடியிருப்பு மீது குண்டுத் தாக்குதல், இறுதியாக கஹவத்தையில் வர்த்தக நிலையம் தாக்கப்பட்டு தீ இடப்பட்டது என்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
நல்லாட்சியில் முக்கிய பங்களிகளாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இருக்கின்றபோதும், முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இந்த வன்முறைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அமைச்சர்களான ரிஷாத் பதுயுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து பொதுபல சேனாவின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்வதற்கு குருநாகலுக்கு பொலிஸார் சென்றிருந்தபோது, அங்கே பொலிஸாரை திட்டித் தீர்த்த ஞானசாரத் தேரோவும், அவரது சகாக்களும், ஞானசேரவைக் கைது செய்தால் தாம் தீக்குளிக்கப்போவதாக பொலிஸாரை எச்சரித்ததைத் தொடர்ந்து ஞானசேரவை கைது செய்யாமல் பொலிஸார் திரும்பி வந்தனர்.
நீதிமன்ற உத்தரவை மீறியும், பொலிசாரை தமது கடமையைச் செய்யவிடாமலும் அடாவடித்தனம் புரியும் ஞானசேரவின் விடயத்தில் அரசாங்கம் ஒரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவே முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.
நீதியை மதிக்காமலும், பொலிஸாரை கடமையைச் செய்யவிடாமலும் வேறு யாரேனும் ஒருவர் நடந்திருப்பாரேயானால் அரசாங்கம் முப்படைகளையும் பயன்படுத்தி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்காதா – அல்லது இந்த அசமந்தப் போக்கை கடைப்பிடித்திருக்குமா?
ஞானசேரத் தேரோ பிரதமரை “பொன்னையன்“ என்று வீதியில் நின்று திட்டித் தீர்க்கும் அளவுக்கு நாட்டின் நிலைமை இன்று நாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஞானசேரவின் தூண்டுதலுக்கு எடுபடாமல் சிங்கள மக்கள் இருப்பதையும், இந்த நாட்டில் இனவாதத்தின் பெயரால் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடக்கூடாது என்பதையும் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றனர்.
சில இளைஞர்களே ஞானசேரவுடன் சேர்ந்து கொண்டு இனவாதக் கருத்துக்களைக் கூறிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் முஸ்லிம்களும் மிகுந்த பொறுமையை கடைப்பிடித்து வருகின்றனர். இதுவரையில் பௌத்த தேவாலயங்கள் மீதோ, அல்லது தமக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடுகின்றவர்களுக்கு எதிராகவோ எந்தவொரு எதிர் வினைகளையும் வெளிப்படுத்தவில்லை. பொறுமையாக இருக்கும் ஒரு சமூகம் பயந்துபோய் இருப்பதாக நினைத்துக்கொண்டு, பொதுபல சேனாவினரும், ராவணா பலவினரும் அளவுக்கு அதிகமாகவே துள்ளிக்கொண்டு இருக்கின்றார்கள்.
முஸ்லிம் மக்கள் அரசியல் தலைமைகளிடமே இப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள். அரசாங்கத்தின் பங்காளியாகவும், ஆளுக்கொரு அமைச்சராகவும் இருக்கும் தலைமைகள் தமது இனத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு தீர்வைக்காண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு இல்லாவிட்டால் ஆட்சியே கவிழ்ந்துவிடும் என்ற நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் விடயத்தில் அசமந்தமாக இருக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமது தலைமைகள் அழுத்தம் திருத்தமாக உணர்த்த வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமது தலைமைகள் அமைச்சர்களாக இருந்து கொண்டு ஆட்சியாளர்களின் தலைவர்களை அணுகி தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளாமல், பொலிஸ்மா அதிபரிடம் முறையிடவும், சக அமைச்சர்களிடம் முறையிடவும் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியாதவர்கள்போல் இருப்பதை முஸ்லிம் மக்கள் விசனத்துடனேயே பார்க்கின்றனர்.
இனவாதப் பேய் ஒன்றுக்கு எதிராகப் போராடுவதும், அதை அடக்குவதற்காக முயற்சிப்பதும், இன்னொரு பேயாக நாம் மாறிவிடுவதாக இருக்கக்கூடாது என்ற நிதானமும், அணுகுமுறையும் தலைமைகளுக்கு இருக்கவேண்டியது அவசியமே. உணர்ச்சிகளுக்கு இடம்கொடுத்து இனவாதிகளின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும்விதமாக செயற்பட்டு, பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளமுடியாது எனபதுதான் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடாக இருக்குமானால் அதை வரவேற்கலாம்.
ஞானசேரவுக்குப் பேய் பிடித்திருக்கின்றதா? அல்லது ஞானசேரவுக்குப் பின்னால் இருந்து சக்திவாய்ந்த காட்டேறிகள் ஞானசேரவைத் தூண்டிவிட்டு இயக்கிக்கொண்டு இருக்கின்றனவா? என்பதையிட்டும் ஆராயந்து அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
உலகம் பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்கதல்களும், புறக்கணிப்புக்களும் இடம்பெறுகின்றன என்பதற்காக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும், தாம் என்ன செய்தாலும் அது பத்தோடு பதினொன்றாகவே போய்விடும் என்றும் இனவாதிகள் செயற்படுவார்களானால் அதற்கான விலையையும் அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே ஐ.எஸ்.தீவிரவாதிகள் இலங்கையில் மறைந்திருக்கின்றார்கள் என்றும் இலங்கை முஸ்லிம்களில் 33பேர் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருக்கின்றார்கள் என்றும் வதந்திகளை தூண்டிவிட்டு முஸ்லிம்களை வன்முறைக்கு இழுக்கவும், முஸ்லிம்கள் மீது கெடுபிடிகளை தூண்டிவிடவும் இந்த இனவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
அந்த வதந்தித் தீயிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக மீண்டுவந்தார்கள். ஆனாலும் முஸ்லிம்களின் காலைச் சுற்றிய பாம்பைப்போல் ஞானசேராவும் அவரது சகாக்களும் ஊர்ந்து கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்தும் இந்த தலையிடியை வைத்திருக்க முடியாது.
இந்த இனவாதிகள் தற்போது புதியதொரு கதையையும் பரப்பி வருகின்றார்கள். முஸ்லிம்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு பெருந்தொகைப் பணத்தையும், ஆயுதங்களையும் முஸ்லிம் நாடுகள் வழங்கி இருக்கின்றன என்றும், முஸ்லிம்கள் இலங்கையில் பெரும் ஆயுத வன்முறையை நடத்துவார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
இல்லாததையும் பொல்லாததையும் கூறி முஸ்லிம்களை பதில் வன்முறையில் ஈடுபடச் செய்து, முஸ்லிம்களை அவா்களிடம் இருக்கின்ற பொருளாதார பின்புலங்களையும் அடக்க வேண்டும் என்பதே இனவாதிகளினதும், அவர்களை பின்புலத்திலிருந்து இயக்குகின்றவர்களினதும் நோக்கமாக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன.
இவ்வாறான சதிகளுக்கு இடம்கொடுக்காமல் நாம் இலங்கையா் என்ற உரிமையை விட்டுக்கொடுக்காமலும், பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டும் இனவாதப் பிசாசை விரட்டும் தந்திரோபாயத்தைப் பிரயோகிக்க வேண்டும்.