மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கேரளா திருச்சூரை சேர்ந்த குட்ட என்கிற ஜிஜின் எனவும், இவரை கோத்தகிரி பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கொடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்த குழு, மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கிவிட்டு ஜெயலலிதாவின் அறைக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 8 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் தற்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.