நடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயதாகியும், இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், திருமணம் முடிவாகவில்லை. நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ் உள்பட சில கதாநாயகர்களுடன் அனுஷ்கா இணைத்தும் பேசப்பட்டார்.
அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும், அதனால் தான் திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.
இக்கோவிலுக்கு அனுஷ்கா வருவதை கோவில் நிர்வாகத்தினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில், சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அனுஷ்கா வரிசையில் நின்றார்.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லையாம். அனுஷ்காவின் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர். கோவில் சன்னதி அருகில் வந்த பிறகு தான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்ததாம். தட்டை வாங்கி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கும் சென்று திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் அனுஷ்காவின் தந்தையோ திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜைகளை நடத்தவில்லை என்று மறுத்தார்.
“லிங்கா படத்தில் நடித்த போது அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். தற்போது பாகுபலி-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் அனுஷ்கா அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்” என்று அவர் கூறினார்.