ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ளார்.
ஜேர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஆறு நாட்கள் விஜயம் செய்யும் பிரதமர் மோடி அந்நாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதோடு, சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தல், தீவிரவாதத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளது.
இவ்விஜயத்தின் முதலாவது அம்சமாக ஜேர்மனி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அங்கேலா மேர்கல் மற்றும் அதிபர் பிராங்க் வோல்டர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அதன் பின்னர் நாளைய தினம் ஸ்பெயின் செல்லும் மோடி, மன்னர் 6-ஆம் பிலிப் மற்றும் அதிபர் மரியானோ ரஜோய் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ராஜீவ் காந்திக்கு பின்னர், சுமார் 30 வருடங்களில் பின்னர் ஸ்பெயின் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடியையே சாரும்.
தொடர்ந்து எதிர்வரும் 31ஆம் திகதி பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதோடு, அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்தோடு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்.
குறிப்பாக செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது விஜயத்தின் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் புதிய ஜனாதிபதி இமானுவேல் மங்ரோங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, அதற்கு மறுநாள் நாடு திரும்பவுள்ளார்.