யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை இன்று நடாத்தியுள்ளது.
இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூன்று தமிழ் மொழி பேசும் நீதிபதிகளும் இன்றைய தினம் முதல் தடவையாக ஒன்றுகூடியுள்ளனர்.
இன்று மாலை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் ஒன்றுகூடிய மேற்படி மூன்று நீதிபதிகளும், குறித்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டனர்.
அத்துடன் இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரத்தை அன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தாக்கல் செய்யவும் சட்டமா அதிபர் சார்பிலான சட்டவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது