மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் மாயமான நீல வண்ண பெட்டி குறித்த தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மான்செஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதன் சில மணி நேரங்களுக்கு முன்னர் தீவிரவாதி சல்மான் அபேதி பயன்படுத்திய நீல வண்ண பெட்டி ஒன்றை விசாரணையின் ஒருபகுதியாக பொலிசார் தேடி வருகின்றனர்.
குறித்த பெட்டியின் கமெரா புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், அதுகுறித்த தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் நான்கு நாட்கள் தீவிரவாதி சல்மான் அபேதி என்னவெல்லாம் செய்தார், எங்கெல்லாம் சென்றார் உள்ளிட்ட தகவல்களை திரட்டி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சல்மான் தாக்குதலுக்கு முன்னர் Wilmslow பகுதியிலும் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குறித்த பெட்டியில் வெடிகுண்டு போன்ற வெடிக்கும் பொருட்கள் இருக்க வாய்ப்பு இல்லை என பொலிஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் தாக்குதல் வழக்கு தொடர்பாக இதுவரை 16 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் இருவரை விடுவித்துள்ளனர், 14 பேர் விசாரணை கைதிகளாக இன்னமும் உள்ளனர்.