சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் மற்ற மூவரும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு சொந்தமான தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தமிழக அரசுக்கு சொந்தமானது என வருவாய் துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த சொத்துகள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செலுத்த வேண்டிய ரொக்க அபராதத்துக்கான ஈடு அல்ல.
இந்த வழக்கில் மொத்தம் 128 சொத்துகள் கையகப்படுத்தப்பட்டாலும், விசாரணை நீதிமன்றம் அவற்றில் 68-ஐ மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.