முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு நீதவான் நீதிமன்ற தலைமை நீதவான் லால் ரணசிங்க பண்டார இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிக்கும் வாய்மூல மறுப்பை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை கொழும்பு நீதவான் நீதிமன்ற தலைமை நீதவான் வழங்கினார்.
இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தமது தரப்பிலான வாய்மூல மறுப்பை முன்வைப்பதற்கு பிறிதொரு திகதியை கோரியிருந்தார்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது மறுப்பை நேற்றைய விசாரணையின் போது வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.